காஞ்சிபுரம், ஜன.21:
காஞ்சிபுரம் கச்சபேசுவரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெருமாள் ஆமை (கச்சம்)வடிவில் சிவபெருமானை வணங்கிய பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான கச்சபேசுவரர் திருக்கோயில்.இக்கோயிலில் கடந்த ஆண்டு தை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நிகழாண்டு தை மாத சித்திரை நட்சத்திரத்தினையொட்டி முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.விழாவையொட்டி காலையில் சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு மூலவருக்கும்,பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
நிகழ்வில் கோயில் செயல் அலுவலர் பெ.கதிரவன், ஆலய திருப்பணிக்குழுவின் தலைவர் எஸ்.பெருமாள்,செயலாளர் சுப்பராயன்,செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் எம்.சிவகுரு ஆகியோர் உட்பட திருப்பணிக்குழு நிர்வாகிகள், கோயில் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.