காஞ்சிபுரம், ஜன.21:
காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் அமைந்துள்ள ராமானுஜர் சந்நிதிக்கு செவ்வாய்க்கிழமை வரதராஜசுவாமி எழுந்தருளி ஸ்ரீதேவி, பூதேவியருடன் வேடர் திருக்கோலத்தில் அலங்காரமாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் அமைந்துள்ளது ராமானுஜர் சந்நிதி.ஆண்டு தோறும் இக்கோயிலுக்கு வரதராஜசுவாமி எழுந்தருளி ராமானுஜருக்கு காட்சியளிக்கும் நிகழ்வு அனுஷ்டானக்குளம் உற்சவம் என நடைபெற்று வருகிறது.
நிகழாண்டு வரதராஜப் பெருமாள் ஆலயத்திலிருந்து மேனா பெட்டியில் காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் உள்ள ராமானுஜர் சந்நிதிக்கு எழுந்தருளினார்.சந்நிதி அருகில் உள்ள சாலைக்கிணற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், சிறப்பு அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
பெருமாளின் வருகையையொட்டி ராமானுஜர் சந்நிதி அருகில் காஞ்சிபுரம் மாநகராட்சி 4 வது மண்டலக்குழு தலைவர் செவிலிமேடு மோகன் ஏற்பாட்டில் அன்னதானமும் நடைபெற்றது.
ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் கையில் வில், அம்பு ஏந்தி வேடர் திருக்கோலத்தில் ராமானுஜருக்கு காட்சியளித்தார். பின்னர் முக்கிய வீதிகள் வழியாக காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் உள்ள தேசிகர் சந்நிதிக்கும், அதனைத் தொடர்ந்து வரதர் கோயில் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் உள்ள ராமானுஜர் வாழ்ந்த இல்லத்துக்கும் சென்று சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து பெருமாள் சந்நிதிக்கு எழுந்தருளினார். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ச.சீனிவாசன், மணியக்காரர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் கோயில் பட்டாச்சாரியார்கள்,பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.