காஞ்சிபுரம், ஜன.15:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் கடந்த 6 தினங்களாக நடைபெற்று வந்த கனு உற்சவம் புதன்கிழமை நிறைவு பெற்றதையடுத்து உற்சவர் காமாட்சிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி ஆகியன நடைபெற்றது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் கனு உற்சவம் நிகழ் மாதம் 9 ஆம் தேதி தொடங்கியது. கனு உற்சவ நிறைவு நாளன்று ஆண்டுக்கு ஒரு முறை உற்சவர் காமட்சி கனுமண்டபத்துக்கு எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான கனு உற்சவ நிறைவையொட்டி உற்சவர் காமாட்சி அம்மன் கனுமண்டபத்துக்கு எழுந்தருளினார்.அங்கு 16 விதமான பழச்சாறுகள், திரவியங்கள்,மூலிகைகள் ஆகியனவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக கோயில் ஸ்தானீகர்களால் புஷ்பாஞ்சலியும் நடத்தப்பட்டது.பொங்கல் பண்டிகையையொட்டி லட்சுமி,சரஸ்வதி சமேதராக உற்சவர் காமாட்சி அம்மன் மஞ்சள் கொத்துடன் ஆலய வளாகத்தில் தங்கத்தேரிலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர்,மணியக்காரர் சூரிய நராயணன்,செயல் அலுவலர் ச.சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.