காஞ்சிபுரம், ஜன.15:
காஞ்சிபுரம் அருகே கிளார் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் அருள்பாலித்து வரும் அகத்திய மாமுனிவரின் அவதார நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் புதன்கிழமை நடைபெற்றன.
காஞ்சிபுரம் அருகே கிளார் கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சப்த ரிஷிகளில் ஒருவரான அகத்திய மாமுனிவரும் அவரது மனைவி லோப முத்திரையும் அருள்பாலித்து வருகின்றனர்.
தை மாத ஆயில்ய நட்சத்திரம் அகத்தியரின் அவதார நட்சத்திரத்தையொட்டி அகத்தியருக்கும், லோப முத்திரைக்கும் சிறப்பு அபிஷேகமும்,அதனையடுத்து சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னர் பள்ளி மாணவர்கள்,பக்தர்கள் பலரும் இணைந்து அகத்தியர் மற்றும் லோப முத்திரை பற்றிய போற்றிப்பாடலையும் பாடி வழிபட்டார்கள்.