காஞ்சிபுரம்,பிப்.11:
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
மாலையில் வள்ளி,தெய்வானை சமேதராக முருகப்பெருமான் வெள்ளித் தேரில் ஆலய வளாகத்தில் உள்ள சுற்றுப்பிரகாரத்தில் பவனி வந்தார்.
கூட்ட நெரிசல் காரணமாக அலங்கார மண்டபத்திலிருந்து சுவாமி வெள்ளித்தேருக்கு வருவது தாமதமானது.இரண்டு மணி நேரம் தாமதமாக வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது.பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கூட்ட நெரிசலில் குழந்தையுடன் வந்த பெண்கள் மற்றும் முதியார்கள் அவதிக்கு உள்ளாகினர். சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பலரும் இறைவனை தரிசிக்க முடியாமல் பாதியிலேயே திரும்பிச் சென்றனர்.
காஞ்சிபுரம் நெமந்தக்கார தெருவில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் தைப்பூசத்தையொட்டி மூலவருக்கு காலையில் சிறப்பு அபிஷேகமும்,மாலையில் மூலவர் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் செவிலிமேடு ஜெம்நகரில் அமைந்துள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் உள்ள சுப்பிரமணியருக்கு காலையில் சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் உள்ள 13 அடி உயர பத்துமலை முருகனுக்கு சிறப்பு பாலாபிஷேகமும்,அலங்கார ஆராதனைகளும் நடைபெற்றன.