Type Here to Get Search Results !

காஞ்சிபுரத்தில் பழமையான 3 கோயில்கள் புதுப்பிக்கும் பணிகள் தொடக்க விழா - அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு


காஞ்சிபுரம், ஜூலை 11: 

காஞ்சிபுரத்தில் பல ஆண்டுகள் பழமையான 3 கோயில்களை புதுப்பிக்கும் பணிகள் தொடக்க விழா வெள்ளிக் கிழமை பவளவண்ணப் பெருமாள் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி கல்வெட்டினை திறந்து வைத்தார்.

தமிழகத்தில் உள்ள பழமையான 63 கோயில்களை புதுப்பிக்க ரூ.100 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். முதல்வரின் காணொலிக் காட்சிக்குப் பிறகு பவளவண்ணப் பெருமாள் கோயில் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான 3 கோயில்களை புதுப்பிக்கும் பணிகளை கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடக்கி வைக்கும் வகையில் அதற்கான கல்வெட்டினை திறந்து வைத்தார்.


கோயில் நகரம் என்ற புகழுக்குரிய காஞ்சிபுரத்தில் ஆழ்வார்களாலும்,சிவனடியார்களாலும் பாடல் பெற்ற கோயில்கள் அதிகமாக உள்ளன.அவற்றில் நகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ளது 


பவள வண்ணப் பெருமாள் கோயில், பச்சை வண்ணப் பெருமாள் கோயில் மற்றும் அழகிய சிங்கப் பெருமாள் கோயில்.  பழமையான இம்மூன்று கோயில்களையும் பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் தமிழக அரசு 

  • பச்சை வண்ணப் பெருமாள் மற்றும் பவளவண்ணப் பெருமாள் கோயில்களுக்கு மொத்தம் ரூ.2.5 கோடியும், 
  • அழகிய சிங்கப் பெருமாள் கோயிலுக்கு ரூ.1.18 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

பச்சை வண்ணப் பெருமாள் மற்றும் பவள வண்ணப் பெருமாள் கோயில்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகும், அழகிய சிங்கப் பெருமாள் கோயில் 15 ஆண்டுகளுக்குப் பிறகும் திருப்பணிகள் தொடங்க இருப்பது குறிப்பிடத் தக்கது.


கல்வெட்டு திறப்பு விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார்.எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


மாவட்ட அறங்காவலர் குழுவின் தலைவர் தியாகராஜன், மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவர் நித்யா சுகுமார், வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.