Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் கோடை உற்சவம் நிறைவு



காஞ்சிபுரம், ஜூலை 4:


காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி தொடங்கிய கோடை உற்சவம் 7 வது நாளாக வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.


காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் கோடை உற்சவம் 7 நாட்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான கோடை உற்சவம் கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது.


தினசரி பெருமாளும்,ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாரும் தனித்தனி கேடயத்தில் திருக்கோயில் திருமுற்றவெளி மண்டபத்தில் ஊஞ்சலாகி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.


நிறைவு நாளாக ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் அத்திகிரி மலையிலிருந்து இறங்கி சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் சந்நிதிக்கு சென்று மீண்டும் ஆலயத்துக்கு திரும்பி வந்தார். ஆலயத்தின் நுழைவு வாயிலில் பெருந்தேவிதாயாருடன் இணைந்து 4 கால் மண்டபத்துக்கு எழுந்தருளினர்.


திருக்கோயில் திருமுற்றவெளி மண்டபத்தில் அமைந்துள்ள ஒரு 4 கால் மண்டபத்தில் பெருமாளும்,மற்றொரு 4 கால் மண்டபத்தில் பெருந்தேவித்தாயாரும் தனித்தனியாகவும், எதிரெதிராகவும் எழுந்தருளியதும் இருவருக்கும் பரிமளம், மகிழம்பூ, கனகாம்பரம் உட்பட பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு  ஊஞ்சலில் அமர்ந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.சிறப்பு தீபாராதனைகளும்  நடைபெற்றது.


பின்னர் இருவரும் தனித்தனியாக அவரவர் சந்நிதிகளுக்கு எழுந்தருளினார். இன்று பெரியாழ்வார் சாற்றுமுறை உற்சவத்தையொட்டி வரதராஜசுவாமி கோயிலில் மாலை தங்கக்கருட வாகனத்தில் பெருமாள் மாட வீதிகளில் பவனி வரவுள்ளார்.ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராஜலட்சுமி மற்றும் கோயில் பட்டாச்சாரியார்கள்,பணியாளர்கள் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.