காஞ்சிபுரம், செப்.21:
தை அமாவாசை, ஆடி அமாவாசையை விட புரட்டாசி மாத மகாளய அமாவாசையே முன்னோர்களுக்கு பிதுர்தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்த நாளாகும்.
இந்நாளில் முன்னோர்கள் மொத்தமாக அவரவர் இல்லங்களுக்கு வந்து அவர்களது வாரிசுகளை வாழ்த்துவதாக இந்துக்களால் பெரிதும் நம்பப்படுகிறது.
எனவே புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி காஞ்சிபுரத்தில் கச்சபேசுவரர் கோயில், தாயார் குளம், சர்வதீர்த்தக்குளம், சின்னக்காஞ்சிபுரத்தில் சாந்தலிங்கேசுவரர் கோயில் ஆகியன உட்பட பல இடங்களில் புரோகிதர்களால் பிதுர்தர்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் திருக்குளத்தின் முன்பாக மட்டுமே லட்சக்கணக்கானோர் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பிதுர்தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிப்டடனர்.
நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க முடியாத 100க்கும் மேற்பட்டோர் அதே குளக்கரையின் வேறு பகுதிக்கு சென்று அவர்களாகவே கையில் எள் தண்ணீர் இறைத்து, சூரியனை வழிபட்டு பிதுர்தர்ப்பணம் செய்து கொண்டதையும் பார்க்க முடிந்தது.
வரிசையில் நிற்காமல் சென்ற சிலருக்கும் வரிசையில் நின்றவர்களுக்கும் இடையே சிறு,சிறு வாக்குவாதங்களும் ஏற்பட்டன. பிதுர்தர்ப்பணம் செய்யத் தேவையான பொருட்களான தேங்காய், வாழைப்பழம், எள், கற்பூரம், ஊதுபத்தி, புஷ்பம் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் ரூ.60 முதல் ரூ.80 வரை கோயில் முன்பாக விற்பனைக்கு வைத்திருந்தனர்.
புரட்டாசி மாத மகாளய அமாவாசையாகவும்,ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகவும் இருந்ததால் பிதுர்தர்ப்பணம் செய்ய வந்திருந்தோரின் கூட்டம் கோயில்களில் அதிகமாக காணப்பட்டது.
படவிளக்கம்}காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் குளக்கரையில் பிதுர்தர்ப்பணம் செய்து கொண்ட பக்தர்களின் கூட்டம்