காஞ்சிபுரம், டிச.13:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம் வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில். இக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ரூ.29 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
புதியதாக இக்கோயிலுக்கு தங்கத்தேர் செய்ய வேண்டும் என பக்தர்கள் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். தங்கத் தேர் செய்யும் பணிகள் 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இடையில் நின்று போயிருந்தது.இதனையறிந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உத்தரவின்படி ஸ்ரீ ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
அறக்கட்டளை நிர்வாகிகளின் மேற்பார்வையில் புதிய தங்கத்தேர் செய்யும் பணி தொடர்ந்து இரு ஆண்டுகளாக காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அமைந்துள்ள மகாபெரியவர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.சுமார் 40க்கும் மேற்பட்ட சிற்பிகள் புதிய தங்கத்தேரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு,அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக இணை ஆணையர் குமரதுரை,ஓரிக்கை மணி மண்டப நிர்வாக அறங்காவலர் மணி ஐயர் ஆகியோரது முழுமையான ஒத்துழைப்புடன் தங்கத்தேர் உருவாக்கப்பட்டு பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.
ஆலய வளாகத்தில் புதிய தங்கத்தேரை நிறுத்துவதற்காக ரூ.18 லட்சத்தில் தனியாக மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.இது குறித்து ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியது.
தங்கத்தேரின் உயரம் 23 அடி,நீளம் 15 அடி,அகலம் 13 அடி,மொத்தம் 23 கிலோ தங்கத்தில் தேர் உருவாக்கப்பட்டு பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளது.வரும் டிசம்பர் 8 ஆம் தேதி கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
அதற்கு இரு தினங்கள் முன்னதாக வரும் டிச.6 ஆம் தேதி மாலை 4 மணிக்கு புதிய தங்கத்தேர் வெள்ளோட்டம், தங்க ரதத்தை ஆலய நிர்வாகிகளிடம் ஒப்படைக்கும் விழா,தங்க ரதம் நிறுத்துவதற்காக ஆலய வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டிடம் திறப்பு விழா ஆகியன ஓரிக்கை மணி மண்டப வளாகத்தில் நடைபெற இருப்பதாக தெரிவித்தனர்.
.png)