காஞ்சிபுரம், டிச.14:
காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கத்தில் அமைந்துள்ளது பழமையான காமாட்சி அம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயில்.இக்கோயிலில் ஆண்டு தோறும் மகா பெரியவர் சுவாமிகள் ஆராதனை உற்சவத்தையொட்டி 3 நாட்கள் சுவாமியும், அம்மனும் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருவர்.
முதல் நாள் தெப்பத்திருவிழாவாக பிரம்மபுரீஸ்வரரும், காமாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து திருக்குளத்திற்கு எழுந்தருளி வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பிரம்மதீர்த்தக் குளத்தில் அமைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளியிருந்த சுவாமிக்கும், அம்மனுக்கும் நடுவில் காஞ்சி மகா பெரியவர் சுவாமிகளின் திருஉருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.
தெப்பம் 3 முறை திருக்குளத்திற்குள் வலம் வந்தது.வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.
தெப்பம் வலம் வருவது நிறைவு பெற்றதும் கோயில் அலங்கார மண்டபத்துக்கு சுவாமியும், அம்மனும் எழுந்தருளிய பிறகு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
ஏற்பாடுகளை சங்கர பக்த ஜன சபா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். திங்கள் கிழமை 2 வது நாளாகவும், செவ்வாய்க்கிழமையும் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
.png)