காஞ்சிபுரம்,மார்ச் 20:
காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றதையொட்டி புதன்கிழமை 1008 சங்காபிஷேகமும், சுவாமியும்,அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும் புதன்கிழமை நடைபெற்றது.
பெருமாள் ஆமை(கச்சம்)வடிவில் சிவனை வணங்கியது உட்பட பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் உடையது காஞ்சிபுரம் கச்சபேசுவரர் திருக்கோயில்.இக்கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி நடைபெற்றது. இதனையொட்டி தொடர்ந்து 48 நாட்களாக மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
இதன் நிறைவு நாளையொட்டி ஆலய வளாகத்தில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் 1008 சங்காபிஷேகம் ஆகியன நடைபெற்றன.இதன் தொடர்ச்சியாக மாலையில் உற்சவர் கச்சபேசுவரர் மற்றும் சுந்தராம்பிகை கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழா ஏற்பாடுகளை செங்குந்த மகாஜன சபையின் தலைவர் எம்.சிவகுரு,திருப்பணிக்குழுவின் தலைவர் எஸ். பெருமாள், செயலாளர் சுப்பராயன் ஆகியோர் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.