காஞ்சிபுரம்,மார்ச் 22:
காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதியாக இருந்து வந்த ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் வார்ஷிக ஆராதனை மகோற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றதையொட்டி காசி,அயோத்தி மற்றும் திருப்பதி கோயில் நிர்வாகிகளும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69 வது பீடாதிபதியாக இருந்து வந்தவர் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள்.இவரது 6 வது வார்ஷிக ஆராதனை மகோற்சவம் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.
தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்று வந்த வேதபாராயணம் நிறைவு பெற்றதையொட்டி 78 வேத விற்பன்னர்களுக்கு தட்சினையும், ஆராதனையில் பங்கேற்ற 32 அக்னி ஹோத்ரிகளுக்கு வஸ்திரங்களையும் ஸ்ரீ மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் வழங்கினார்.மடத்தின் ஸ்ரீகாரியம் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி 81 இசைக்கலைஞர்களை கௌரவித்தார்.
ஏகாதச ருத்ர கலச தீர்த்தங்கள் மூலமாக மகா பெரியவர் சுவமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களுக்கு காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு அபிஷேகங்களையும், அலங்கார தீபாராதனைகளையும் நடத்தியதுடன் பக்தர்களுக்கு அருளாசியும் வழங்கினார்.
அதிஷ்டானத்தில் மகா பெரியவர் சுவாமிகள் தங்ககீரீடம்,தங்கக்கவசம், வைரவிபூதிப்பட்டை,நவரத்ன அபய ஹஸ்தம் ஆகியன அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீ ஜெயேந்திரர் அதிஷ்டானத்திலும் தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மலர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. மடத்தின் நிர்வாகிகள் ஜானகிராமன், வெங்கட்ராமன் ஆகியோர் நகர் வரவேற்புக் குழுவின் சார்பில் நடைபெற்ற அன்னதானத்தை தொடக்கி வைத்தனர்.
ஆராதனை மகோற்சவத்தில் அயோத்தி ராமஜென்ம பூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளையின் பொருளாளர் கேவிந்தகிரி தேவ் மகராஜ், மும்பை மருத்துவர் வி.சங்கர்,காசி மன்னர் அனந்த நாராயணன், தொழிலதிபர்கள் ரமேஷ் சேதுராமன், ஆர்.சீனிவாசன், தணிக்கையாளர் பாலகிருஷ்ணன், காசி சங்கர மடத்தின் மேலாளர் சுப்பிரமணியம், சாஸ்த்ரா பல்கலையின் வேந்தர் சேதுராமன், துணைவேந்தர் வைத்திய சுப்பிரமணியம், நெறியாளர் சுவாமிநாதன், காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் துணைவேந்தர் சீனிவாசலு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் துணை செயல் அலுவலர் எம்.லோகநாதன் மற்றும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.மகாராஜபுரம் வித்வான் சீனிவாசன் குழுவினரின் பக்தி இன்னிசைக் கச்சேரியும் மாலையில் நடைபெற்றது.