காஞ்சிபுரம்,மார்ச் 25:
பங்குனி உத்திரத் திருநாளையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில் திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
படவிளக்கம்: பங்குனி உத்திரத்திருநாளையொட்டி திருமணத் திருக்கோலத்தில் காட்சியளித்த காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயில்.இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருவதால் சுவாமி வீதியுலா நடைபெறாமல் இருந்து வருகிறது.
பங்குனி உத்திரத் திருநாளையொட்டி ஏலவார்குழலி அம்பிகையும், ஏகாம்பரேசுவரருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. காஞ்சிபுரம் பாலகுஜாம்பாள் சமேத வெடித்துக்கூடிய வசிஸ்டேஸ்வரர் சுவாமி கோயிலில் திருக்கல்யாணமும், அதனையடுத்து சுவாமியும், அம்மனும் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
காஞ்சிபுரம் திருக்காலிமேடு பிரம்மராம்பிகை சமேத சத்யநாதசுவாமிக்கும்,சண்முக நகரில் அமைந்துள்ள கோகிலாம்பாள் சமேத கல்யாணசுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.காஞ்சிபுரம் கமலாம்பிகை சமேத காயாரோகணீஸ்வரர் ஆலயத்திலும் திருக்கல்யாணம் நடைபெற்றது.