காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி உற்சவர் வரதரஜாப் பெருமாளுக்கும், மலையாள நாச்சியாருக்கும் நேற்று (திங்கள்கிழமை) திருக்கல்யாணம் நடைபெற்றது.
படவிளக்கம் : பங்குனி உத்திரத் திருக்கல்யாண திருநாளையொட்டி திருமணத் திருக்கோலத்தில் காட்சியளித்த உற்சவர் வரதராஜப்பெருமாள் மற்றும் மலையாள நாச்சியார்
அத்திவரதர் திருவிழா புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணத் திருவிழா நிகழ் மாதம் 19 ஆம் தேதி தொடங்கியது.
விழாவையொட்டி தினசரி மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வரதராஜப் பெருமாளும், மலையாள நாச்சியாரும் தனித்தனியாக கேடயத்தில் அலங்காரமாகி சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதிக்கு சென்று திரும்பினர்.பின்னர் ஆலய வளாகத்தில் உள்ள 100 கால் மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
பங்குனி உத்திரத் திருக்கல்யாணத் திருவிழாவின் நிறைவு நாளையொட்டி திங்கள்கிழமை வழக்கம் போல பெருமாளும், மலையாள நாச்சியாரும் ஆஞ்சநேயர் கோயில் சென்று திரும்பியதும் கோயில் வளாகத்தில் உள்ள 4 கால் மண்டபத்தில் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக இருவரும் 100 கால் மண்டபத்துக்கு எழுந்தருளி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வரதராஜப் பெருமாள், மலையாள நாச்சியார், ஆண்டாள் ஆகியோர் பெருந்தேவித்தாயார் சந்நிதிக்கு எழுந்தருளும் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தாயார் சேர்த்தி உற்சவம் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் எஸ்.சீனிவாசன் தலைமையில் கோயில் பட்டாச்சாரியார்கள்,கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.