காஞ்சிபுரம்,மே.7
காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயில் வைகாசித் திருவிழா வரும் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருப்பதையொட்டி ஆலயத்தின் முன்பாக பந்தல் அமைப்பதற்கான பந்தக்கால் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அத்திவரதர் புகழுக்குரியதும்,ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற பெருமைக்கும் உரியது காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித்தாயார் சமேத தேவராஜசுவாமி திருக்கோயில்.
ஆண்டுதோறும் இக்கோயிலில் வைகாசித் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 20 ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.விழா தொடங்க இருப்பதையொட்டி ஆலயத்தின் முன்பாகவும், கொடிமரம் அருகில், கங்கை கொண்டான் மண்டபம், தேரடி ஆகிய பகுதிகளில் விழாப் பந்தல் அமைக்கும் பணிகளை தொடங்குவதற்காக பந்தக்கால் நடும் பணிகள் தொடங்கியது.
கோயில் கொடிமரம் அருகில் பந்தக்கால்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டு ஆலயத்தின் செயல் அலுலலர் எஸ்.சீனிவாசன் முன்னிலையில் பந்தக்கால்கள் நடப்பட்டன.
இந்நிகழ்வில் கோயில் பட்டாச்சாரியார்கள், தாதாச்சாரிய வம்சத்தினர் உட்பட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.விழாவையொட்டி தினசரி காலையிலும்,மாலையிலும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வரவுள்ளார்.
மே.22 ஆம் தேதி கருடசேவையும்,26 ஆம் தேதி தேரோட்டமும்,28 ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது. வரும் 29 ஆம் தேதி வெட்டிவேர் சப்பரத்தில் பெருமாள் வீதியுலா வருவதோடு விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பட்டாச்சாரியார்கள்,பணியாளர்கள் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.