காஞ்சிபுரம், மே 22-
காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயில் வைகாசித் திருவிழாவின் 3 வது நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற தங்கக் கருட சேவைக் காட்சியின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர்.
பழமையும், வரலாற்றுச் சிறப்பும், அத்திவரதர் பெருவிழா புகழுக்கும் உரியது காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித் தாயார் சமேத தேவராஜசுவாமி திருக்கோயில்.
இக்கோயில் வைகாசித் திருவிழா நிகழ் மாதம் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3 வது நாள் முக்கிய நிகழ்வான தங்கக் கருட சேவைக் காட்சி நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி உற்சவர் தேவராஜசுவாமி ஊதா நிறப்பட்டு உடுத்தியும், வைர வைடூரிய ஆபணங்கள் அணிந்தும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து புறப்பட்டு கோயிலின் சுற்றுப்பிராகரத்தில் உள்ள ராமானுஜர், தேசிகர் சந்நிதிகளுக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
![]() |
| தங்கக்கருட வாகனத்தில் வீதியுலா வந்த காஞ்சிபுரம் தேவராஜசுவாமி |
வீதியுலாவிற்காக ஆலயத்திலிருந்து வெளியில் வரும் போது ஆலய நுழைவு வாயிலில் கோபுர தரிசனம் எனும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெருமாளுக்கு இரட்டைக்கொடை பிடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பின்னர் பெருமாள் செட்டி தெரு,திருக்கச்சி நம்பிகள் தெரு,ரங்கசாமி குளம் வழியாக விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் உள்ள தேசிகர் சந்நிதிக்கு எழுந்தருளி அங்கு மாலை மாற்றும் வைபவம் நிகழ்ந்தது. தேசிகர் சுவாமிகளின் மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பிள்ளையார்பாளையம், கிருஷ்ணன்தெரு, காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் வழியாக கங்கை கொண்டான் மண்டபத்தில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதி மண்டகப்படிக்கு எழுந்தருளினார்.
இதனையடுத்து ராஜவீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்துக்கு வந்து சேர்ந்தார். வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேவராஜசுவாமியின் கருட சேவைக் காட்சியைக் கண்டு தரிசனம் செய்தனர்.
விழாவில் அகோபில மடத்தின் ஜீயர் சுவாமிகள்,காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்,எஸ்பி கே.சண்முகம்,முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் உட்பட பலரும் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.
காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தங்கக்கருட வாகனம் வரும் வழிநெடுகிலும் திரளான பக்தர்கள்,சமூக சேவை அமைப்புகள், வணிக நிறுவனங்கள் பலவும் பக்தர்களுக்கு நீர்,மோர் மற்றும் அன்னதானமும் வழங்கினார்கள்.
பக்தர்கள் பலரும் வழி நெடுகிலும் பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி எடுத்தும் சுவாமி தரிசனம் செய்தனர்.
.png)


.jpg)
