காஞ்சிபுரம், ஜூன் 1
காஞ்சிபுரத்தில் வைகுந்தவல்லி சமேத வைகுண்டப் பெருமாள் திருக்கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
![]() |
படவிளக்கம் : கருடாழ்வார் உருவம் பொறித்த கொடியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீதேவி,பூதேவி சமேத உற்சவர் வைகுண்டப் பெருமாள் |
பழமையும்,வரலாற்றுச் சிறப்பும் உடையது காஞ்சிபுரத்தில் உள்ள வைகுந்தவல்லி சமேத வைகுண்டப் பெருமாள் திருக்கோயில்.108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும் இருந்து வரும் இக்கோயிலில் வைகாசி மாத பிரமோத்சவத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வைகுண்டப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் கொடிமரம் அருகே எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி உற்சவர் வைகுண்டப் பெருமாள் கோயில் முன்பாக வைத்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.பின்னர் கோயிலில் உள்ள தங்கக் கொடி மரத்தில் கோயில் பட்டாச்சாரியார்களால் கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
கொடியேற்ற விழாவில் கோயில் செயல் அலுவலர் வஜ்ஜிரவேலு,அறநிலையத்துறை ஆய்வாளர் திலகவதி,கச்சபேசுவர் கோயில் மேலாளர் சுரேஷ் ஆகியோர் உட்பட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்தை தொடர்ந்து பெருமாள் பவளக்கால் சப்பரத்தில் வீதியுலா வந்தார்.விழாவையொட்டி தினசரி பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் பவனி வந்து அருள்பாலிக்கவுள்ளார்.
வரும் ஜூன்.3 கருட சேவையும், ஜூன்.7 தேரோட்டமும், ஜூன்.9 தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோயில் பட்டாச்சாரியார்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.