காஞ்சிபுரம் ஆதி காமாட்சி எனப்படும் ஆதி பீடபரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம். காஞ்சிபுரத்தில் பழமையும் வரலாற்று சிறப்பும் வாய்ந்த ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி யாகசாலை பூஜைகள் இம்மாதம் 7 ஆம் தேதி அனுக்கை, கணபதி பூஜையுடன் தொடங்கின.

மறுநாள் நவக்கிரக ஹோமம் மூர்த்தி ஹோமம் ஆகியவை நடைபெற்றது. இதனை தொடர்ந்து புதன்கிழமை ஆறாம் கால யாக பூஜைகள், தீபாராதனைகள் நிறைவு பெற்ற பிறகு புனித நீர்க் குடங்கள் சிவாச்சாரியார்களால் கோபுரங்களுக்கு மங்கல மேள வாத்தியங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மூலவர் காளிகாம்பாளுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது .கும்பாபிஷேக விழாவில் அறநிலையத்துறை இணை ஆணையர் ரா .வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, கல்கத்தா தலைமை நீதிபதி சிவஞானத்தின் மனைவி கிருஷ்ணவேணி சிவஞானம்,
திருவண்ணாமலை ஆதி லிங்கச்சார்யா குரு சுவாமிகள் ஆதீன மடத்தின் 65 ஆவது பீடாதிபதி சிவராஜ குரு சுவாமிகள் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் ஓதுவார் தமிழ்ச்செல்வன் கும்பாபிஷேகத்தை நேர்முக வர்ணனை செய்தார். அறநிலையத்துறை ஆய்வாளர்கள், செயல் அலுவலர்கள், பொதுமக்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தை யொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வான வேடிக்கைகளும் நடைபெற்றன .விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர், கோவில் அறங்காவலர்கள் குழுவினர் ,திருக்கோவில் அர்ச்சகர்கள் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.