![]() |
படவிளக்கம்: பச்சைப்பட்டும் உடுத்தியும், முத்துத் தொப்பஹார முத்துக் கிரீடமும் அணிந்து தங்கக்கருட வாகனத்தில் வீதியுலா வந்த உற்சவர் வரதராஜசுவாமி |
காஞ்சிபுரம், ஜூலை 15:
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உற்சவர் வரதராஜப் பெருமாள் ஆனி மாத கருட சேவையையொட்டி தங்கக் கருட வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அத்திவரதர் புகழுக்குரியதும், 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகவும் இருந்து வருவது காஞ்சிபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜப் பெருமாள் திருக்கோயில்.
இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசித் திருவிழா 3 வது நாளின் போதும், ஆனி மாதம் மற்றும் ஆடி மாதம் உட்பட ஆண்டுக்கு 3 முறை தங்கக்கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.நிகழாண்டுக்கான ஆனி மாத கருட சேவையையொட்டி காலையில் உற்சவர் தேவராஜசுவாமிக்கு சிறப்புத் திருமஞ்சனம்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.
மாலையில் பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து வாகன மண்டபத்துக்கு வந்து தங்ககருட வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தியமர்ந்தும்,முத்துத் தொப்பஹாரம் என்ற முத்துக்கிரீடம் அணிந்தும்,தங்க ஆபரணங்கள், மலர்மாலைகள் அணிந்தும் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
மஞ்சள் பட்டாடை தங்கக்கருட வாகனத்திற்கு அணிந்தவாறு வந்த பெருமாள் முதலாவதாக ஆலய வளாகத்தில் உள்ள ஆழ்வார் சுற்றுப் பிரகாரத்திற்குள் வலம் வந்தார். பின்னர் ஆலயத்தின் நுழைவு வாயிலில் ராஜகோபுரத்தின் முன்பாக கோபுர தரிசனம் நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயர் சந்நிதியில் சிறப்பு தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து கோயில் மாட வீதியில் உலா வந்து ஆலயத்துக்கு எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து பெரியாழ்வார் சாற்றுமுறை உற்சவமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் எஸ்.சீனிவாசன் தலைமையில் கோயில் பட்டாச்சாரியார்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.