காஞ்சிபுரம், டிச.3:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே மாகறலில் அமைந்துள்ள திருமாகறலீசுவர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
பழமையும்,வரலாற்றுச் சிறப்பும் உடையது காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் மாகறல் கிராமத்தில் அமைந்துள்ள திருபுவனநாயகி சமேத திருமாகறலீசுவரர் திருக்கோயில்.
இக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி உபயதாரர்கள் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் பொது நிதியிலிருந்துகோயிலை புதுப்பித்து மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அண்மையில் பாலலாய பூஜைகளும் நடைபெற்றது.
ராஜகோபுரம், விநாயகர், ஆறுமுக சுவாமி, பைரவர், கொடிமரம், ஆலயத்தின் முன்மண்டபம் ஆகியன உட்பட பல்வேறு திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
கும்பாபிஷேகத்தையொட்டி யாகாசாலை பூஜைகள் வரும் டிசம்பர் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அனுக்கை விக்னேசுவரபூஜை,கணபதி ஹோம்,நவக்கிரக பூஜை ஆகியனவற்றுடன் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன.
இதன் தொடர்ச்சியாக வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையடுத்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.
மாலையில் திருபுவன நாயகிக்கும், திருமாகறலீசுவரருக்கும் திருக்கல்யாணமும் பின்னர் பஞ்சமூர்த்தி வீதியுலாவும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பெ.கதிகரவன், தக்கார் வஜ்ரவேலு மற்றும் உபயதாரர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் மாகறல் கிராமத்தினர் ஆகியோர் செய்து வருகின்றனர்.