காஞ்சிபுரம், டிச.7:
காஞ்சிபுரத்தில் இந்து ஆன்மீக சேவா டிரஸ்ட் சார்பில் திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு சமர்ப்பிப்பதற்காக கொண்டு வரப்பட்ட 7 திருக்குடைகள் ஏராளமான சிவனடியார்களுடன் ஊர்வலாக சனிக்கிழமை எடுத்து வரப்பட்டது.
இந்து ஆன்மீக சேவா சமிதி டிரஸ்ட் சார்பில் உலக நன்மைக்காக திருவண்ணாமலையில் ஆண்டு தோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பிரமோற்சவத்தின் போது அண்ணாமலையாருக்கு காணிக்கையாக வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.
விழா நாட்களில் சுவாமியும், அம்மனும் வீதியுலா வரும் போது திருக்குடைகள் பயன்படுத்தப்படுகிறது. நிகழாண்டு திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு காணிக்கையாக வழங்க 7 திருக்குடைகள் வழங்க முடிவு செய்யப்பட்டு திருமுல்லை வாயல் கொடியுடையம்மன் உடனுறை மாசிலாமணீஸ்வரர் சந்தியிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
காஞ்சிபுரத்திற்கு சிவனடியார்களுடன் வந்த திருக்குடைகளுக்கு ஆழ்வார் பங்களாவில் உள்ள நாராயணகுரு சேவாஸ்ரம வைத்தியசாலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்புக்குப் பின்னர் காஞ்சிபுரத்தின் ராஜவீதிகளில் இந்து ஆந்மீக சேவா சமிதி அறக்கட்டளையின் நிறுவனர் லிங்கேசுவரன் தலைமையில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. ஊர்வலத்தில் ஆதி அண்ணாமலையார் அருள்வாக்கு பீடத்தின் ஒருங்கிணைப்பாளர் பவானிசங்கர் உட்பட ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
7 திருக்குடைகளும் சனிக்கிழமை இரவு திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாருக்கு காணிக்கையாக்கப்படவுள்ளது.