காஞ்சிபுரம், டிச.22:
காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் 32 வது ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண மகோற்சவம் ஸ்ரீசீத்தாராம பஜனை மண்டலி சார்பில் அதன் தலைவர் வி.பி. குமாரகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் ஆர்.வேணுகோபாலன், பொருளாளர் ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டலியின் செயலாளர் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் கடையநல்லூர் ராஜகோபால் தாஸ் பாகவதரின் நாமசங்கீர்த்தனம் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஸ்ரீராதா கல்யாண மகோற்சவத்தை நடத்தி வைத்து காஞ்சி காமகோடி மடத்தின் 70 வது பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கி பேசியதாவது:-
காஞ்சி ஸ்ரீ மடத்தின் 68 வது பீடாதிபதியாக இருந்தவர் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.இவர் தவம்,மௌனம், சஞ்சாரம்,உபன்யாசங்கள் இவற்றின் மூலமாக தர்மத்தைப் பாதுகாத்தார்.
நல்ல சூழ்நிலை,நல்ல பழக்க வழக்கங்கள், நல்லோர் ஆசிகள்,நல்ல ஒழுக்கம் இவையெல்லாம் இருந்தால் தான் தெய்வத்தை உணர முடியும் என்று சொன்னதோடு அதன்படி நடமாடும் தெய்வமாகவே வாழ்ந்தும் காட்டினார்.
தர்மத்தைப் பாதுகாத்தால் மனிதநேயம் நிலைத்து நிற்கும் என்றார். எளிமையாக வாழ்ந்து தர்மத்தைக் காப்பாற்றிய பெருமைக்குரியவர். காமாட்சி அம்மன் கோயில்,மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட கும்பாபிஷேகங்களை நடத்தியிருந்தாலும் சிறு,சிறு கோயில்களையும் புதுப்பித்து அவற்றுக்கு கும்பாபிஷேகங்களை நடத்தி அழகு பார்த்தவர்.
கடவுள் வழிபாட்டின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்திடும் வகையில் அவரது செயல்கள் அமைந்திருந்தன.
இதே போல காஞ்சி ஸ்ரீ மடத்தின் 69 வது பீடாதிபதியாக இருந்து வந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவர் இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்கும் சென்றதோடு நின்று விடாமல் பல குக்கிராமங்களுக்கும், குடிசைகளுக்கும் சென்று ஏழை,எளிய மக்களுக்காகவே ஆலயங்களில் விளக்கு பூஜைகள், மூலவிக்கிரகங்கள் அமைத்தல், சமூக சேவை செய்தல் என மக்களைத் தேடி மதத்தைக் கொண்டு சென்ற பெருமைக்குரியவராக இருந்தார்.
இவ்விரு குருமார்களும் பல குருமார்களை உருவாக்கி அவர்கள் மூலமாகவும் இந்திய தேசம் வலிமை பெற்றிருக்கிறது.முக்கியமாக காஞ்சிபுரம் மிகச் சிறந்த நகராக, புண்ணிய தேசமாக மாறியிருக்க இரு குருமார்களுமே காரணமாகும்.ஆன்மீகத்திற்கும்,கல்விக்கும் முக்கியமான கேந்திரமாக காஞ்சிபுரம் திகழ்கிறது.
பக்தி என்பது சுயநலம் சார்ந்ததாக இல்லாமல் நமது சமுதாயத்தை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். நல்ல எண்ணத்துடன்,நல்ல ஒழுக்கத்துடன்,சஞ்சலமற்ற மனதுடன் பணிபுரிவதே பக்தி என்றும் காஞ்சி சங்கராசாரியார் சுவாமிகள் பேசினார்.