காஞ்சிபுரம், ஆக.27:
மகாசக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வரும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ளது பழமையான ஏலேல சிங்க விநாயகர் திருக்கோயில்.
இக்கோயிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி திருநாளன்று மட்டும் ஆலயத்துக்கு வரும் பக்தர்களிடம் ரூபாய் நோட்டுக்களை சலவைத் தாள்களாக பெற்று விநாயகரை அலங்கரித்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுவது பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது.
நிகழாண்டு 18ஆம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தியையொட்டி ஏலேல சிங்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து ரூ.17 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
இது குறித்து ஆலய நிர்வாகக்குழுவின் தலைவர் குப்புச்சாமி கூறுகையில் ஆண்டு தோறும் பக்தர்களிடம் லட்சக் கணக்கில் சலவைத் தாள்களாக பெற்று அதனை விநாயகருக்கு அலங்கரித்து தீபாராதனைகள் நடத்துவோம்.
யார், யாரிடம் எவ்வளவு பெறப்பட்டது என்பதை கணக்கு வைத்துக் கொண்டு அத்தொகையை விநாயகர் சதுர்த்தி விழா முடிந்தவுடன் அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவோம்.
இந்த ஆண்டு மொத்தம் ரூ.17 லட்சம் மதிப்பில் விநாயகர் அலங்கரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.