காஞ்சிபுரம், ஆக.28:
வைணவ திவ்ய தேசங்களில் 108 இல் ஒன்றானதும்,அத்திவரதர் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோஷணம் நடைபெறுவதற்காக சுமார் 22 கோடி மதிப்பில் திருப்பணிகள் செய்ய திட்டமிடப்பட்டு திருப்பணிகள் ஒவ்வொன்றாக நடந்து வருகிறது.
மகா சம்ப்ரோஷணத்திற்கான திருப்பணிகள் தொடங்கவுள்ள நிலையில் 5 சந்நிதிகளுக்கும் பாலாலய உற்சவம் நடைபெற்றது.
பாலாலய உற்சவத்தையொட்டி கண்ணாடி வழியாக சந்நிதி கோபுரங்கள் காட்டப்பட்டு,புனித நீர் கலசங்களை வைத்து கோயில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓதி சிறப்பு பூஜைகள் செய்தனர்.பின்னர் 5 சந்நிதிகளில் இருந்தும் மங்கல மேள வாத்தியங்கள் முழுங்க வேதபாராயண கோஷ்டியினர் வேதமந்திரங்களை பாராயணம் செய்து வர புனித நீர் கலசம் ஊர்வலமாக ஆலய வளாகத்தில் உள்ள கிளி மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அத்திமரத்தில் வரையப்பட்ட வேணுகோபாலன், வரதர்,ரங்கநாதர், திருவனந்தாழ்வார், கருமாணிக்க வரதர் உள்ளிட்ட 5 சுவாமிகளின் படங்களுக்கும் கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்து யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு பாலாலய உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.பாலாலய உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இது குறித்து கோயில் உதவி ஆணையர் ஆர்.ராஜலட்சுமி கூறுகையில் கோயிலுக்கான மகாசம்ப்ரோஷண திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இதன் ஒரு கட்டமாக தற்போது 5 சந்நிதிகளுக்கு பாலாலய உற்சவம் நிறைவு பெற்றுள்ளது.
சுமார் 6 மாத காலத்திற்குள் திருப்பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.