காஞ்சிபுரம், செப்.16:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி நவராத்திரி உற்சவம் தொடங்க உள்ளது.
சக்தி பீடங்களில் ஒன்றான இவ்வாலயத்தில், சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பரிபூரண ஆசீர்வாதத்துடன் விழா நடைபெறுகிறது.
உற்சவ காலத்தில் தினமும் ஸ்ரீவித்யா ஹோமம், நவக்கிரக ஹோமம் நடத்தப்படும். காலை 10 மணி முதல் நவாவரண பூஜை நடைபெறும். இவ்விழாவில் பக்தர்கள் நேரடியாக பங்கேற்க அனுமதி இல்லை.
அதனைத் தொடர்ந்து தினமும் சுகாசினி பூஜை, கன்னியாபூஜை நடைபெறும். மாலை நேரத்தில் அம்பாள் லட்சுமி, சரஸ்வதி தேவிகளுடன் வசந்த நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருளி, சிறப்பு தூப தீப ஆராதனை நடைபெறும்.
அதேபோல், தினமும் சூரசம்கார நிகழ்ச்சி நடத்தப்படும். நான்கு வேதங்கள் உச்சரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.
அக்டோபர் 2ஆம் தேதி விஜயதசமி நாளில் நவாவரண பூஜை நிறைவு பெறும். தொடர்ந்து அக்டோபர் 4ஆம் தேதி அம்பாளுக்கு சகஸ்ர கலச அபிஷேகமும் நடைபெறும்.
“இந்த புனித திருவிழாவில் அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு அம்பாளின் அருளைப் பெறுங்கள்” என ஆலய ஸ்ரீ காரியம் சுந்தரேச ஐயர் அறிவித்துள்ளார்.